(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 25 பிற்பகல் 06.20) முன்கூட்டியே எச்சரிக்கை தகவல்கள் கிடைத்து இருந்த போதும் ஞாயிறு குண்டு தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு செய்தி வந்துள்ளது.
இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக கடமை பொறுப்புகளை தவறியமை, 250 மனித உயிர்கள் கொலை செய்யப்பட இடமளித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு வாக்குமூலம் அளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு கடந்த 23ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே அழைப்பாணை விடுத்துள்ளார்.
தான் கைது செய்யப்படுவதாக தகவல் அறிந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் திடீரென அலரி மாளிகைக்கு சென்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா கடந்த ஏப்ரல் மாதம் 4, 10, 16, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இலங்கையின் அரச புலனாய்வு சேவை பிரதிநிதியாக இருந்த நிலந்த ஜெயவர்த்தனவிற்கு முன்னெச்சரிக்கை கடிதம் அனுப்பியிருந்தது. அரச புலனாய்வு பிரதானி நேரடியாக ஜனாதிபதிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர். இந்த குண்டு தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணைக்குச் சென்ற அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி நிலந்த ஜெயவர்தன தனக்கு கிடைத்த எச்சரிக்கை தகவலை ஜனாதிபதிக்கு கூறியதாக வாக்குமூலம் அளிக்கவில்லை. என்றபோதும் தற்போது தான் அந்தத் தகவலை ஜனாதிபதிக்கு கூறியதாக தெரிவித்து வருகிறார்.
எனினும் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதை முன்கூட்டியே அறிந்திருந்த மைத்திரிபால சிறிசேன அப்போது சிங்கப்பூர் விஜயம் செய்து குண்டு வெடிக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்தார். மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் பாராளுமன்றில் ஆற்றிய உரையில் குண்டு வெடிப்பதற்கு முன்னரே அது தொடர்பில் தான் அறிந்து வைத்திருந்ததை உறுதிப்படுத்தினார்.
பிரதமர், பாதுகாப்பு பிரதி அமைச்சர், பொலிஸ் மாஅதிபர் போன்றவர்களை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைக்காத மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு பதிலாக திலங்க சுமதிபால, மஹிந்த அமரவீர போன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்தார்.
சகரான் என்ற சந்தேக நபரை பின் தொடர்ந்து அவருடைய நடவடிக்கைகளை கண்காணித்து அவரை கைது செய்வதற்கு நீதிமன்ற பிடியாணை பெற்றிருந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதானி நாலக்க சில்வாவை செயல்பட விடாது, தன்னை கொலை செய்ய சூழ்ச்சி செய்ததாக பொய் குற்றம் சுமத்தி நாலக்க சில்வாவை கைது செய்து விளக்கமறியலில் வைத்தார் மைத்திரிபால சிறிசேன.
ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு தவறிய குற்றச்சாட்டில் மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட்டால் அதற்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் மாத்திரமே எதிர்ப்பு தெரிவிப்பர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
---------------------------
by (2019-12-25 04:47:34)
Leave a Reply